வெள்ளி, ஆகஸ்ட் 29

வேரறுந்த மரம்

             

                 முகமும் தளர்ந்திருக்கும் அவருடைய உடலும் மூக்கையா பிள்ளைக்கு எண்பெத்தி எட்டு வயதிருக்கும் எனக்காட்டியது. தன்னுடைய நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டிருந்தார். இப்போது அறுபத்தைந்து வயதான தனது மூத்த பிள்ளையும்  ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டிருந்தபடியால் கொஞ்சம் கண்ணீரோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் மூக்கையா பிள்ளை. 

                மூக்கையா பிள்ளை அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் ஓரளவு தெரிந்த பெரிய மனிதர்தான். இருந்தாலும் வீம்பும் பிடிவாதமும் பிடித்தவர். கதர் சட்டை வேட்டிதான் அணிவார். இன்றும் அந்த ஆடையைத்தவிர வேறு அணிந்ததில்லை. ஒரு காலத்தில் வியாபாரத்தில் உச்சத்தில் இருந்தார். தன்னுடைய பணத்தை எல்லாம் நிலங்களாக வாங்கி குவித்திருந்தார். இன்னும் மண்ணாசை அடங்கவில்லை.

                  பிள்ளைகள் நான்கு பேரும் அவ்வளவு வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பெண் பிள்ளைகள் கல்யாணம் முடித்துக்கொடுத்து மாப்பிள்ளைகளின் தயவில் சந்தோசமாக குடும்பம் நடத்திவிட்டு பிள்ளைகளையும் பெற்று சின்ன வயதிலேயே நோயின் காரணமாக அடுத்தடுத்த சில வருடங்களில் இறந்துவிட்டனர்.

              மூக்கையா பிள்ளை தன்னுடைய மனைவி இருந்தவரை கம்பீரமாக சுற்றித்திரிந்தவர். தன்னுடைய பணத்தினை யாருக்காகவும் செலவழிக்காதவர். தன் உடம்பு சரியில்லாவிட்டால்கூட பணம் தராமல் சரியாகவேண்டும் என நினைப்பவர். இப்போதுகூட இறந்த தனது மூத்த பிள்ளையின் மருத்துவ செலவுக்குகூட சல்லிக்காசு செலவழிக்காதவர். மூத்த பிள்ளையின் மனைவிக்குச் சொல்லி அழக்கூட உறவினர்கள் யாருமில்லை. அமைதியாக வழியும் கண்ணீரோடு கணவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

          துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் மூக்கையா பிள்ளையை மறைமுகமாக வசைபாடிக்கொண்டிருந்தனர். 

                        ”இம்புட்டு பணத்தையும் வச்சுக்கிட்டு மனுசன் என்ன பண்ணப்போறாராம்.

                                        இவர் மட்டும் கொஞ்சம் பணம் செலவழித்திருந்தால் இதய ஆப்பிரேஷன் பண்ணி அவரைக்காப்பாற்றி இருக்கலாம். வயசாக வயசாக இம்புட்டு பிடிவாதம் இருக்கக்கூடாது”

                 புள்ளைகளுக்குகூட உதவாத அந்தப்பணம் எதுக்கு! 

                       நிலமா வாங்கி குவிக்கிறாரே! இவரு சாகுறப்போ கொண்டா போகப்போகிறார்!  என்று ஆளாளுக்கு அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

                        எந்தச் சலனமும் இன்றி மூக்கையா பிள்ளை அமர்ந்திருந்தார். இறந்த உடலை தூக்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

                  மூக்கையாபிள்ளையின் பால்ய தோழரான சுப்பையா நாயக்கர் துக்கம் விசாரிக்க அப்போதுதான் காரில் வந்து இறங்கினார். அவரும் மூக்கையாபிள்ளைக்கு ஈடான வசதி படைத்தவர்தான். பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

                 அவரைப்பார்த்தவுடன் மூக்கையாபிள்ளைக்கு ஒரு பக்கம் சந்தோசம். அவருடைய இடம் ஒன்றினை ஏற்கனவே விலைக்கு கேட்டிருந்தார். அதை வாங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. அந்த எண்ணம் மூக்கையாபிள்ளையின் மனதில் ஓடி மறைந்தது. சில சம்பிரதாய விசாரிப்புகளுக்குப்பின் சுப்பையா நாயக்கர் அவசர வேலை இருப்பதாகக்கூறி கிளம்பிவிட்டார்.

                     உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தபடியால் உடம்பினை சீக்கிரம் தூக்கவேண்டும் என்றனர். அனைவருக்கும் பசி வேறு வயிற்றைக்கிள்ளியது. வந்தவர்களுக்கும் அழுது கொண்டிருப்பவர்களுக்கு சுக்கு காப்பி கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. மூக்கையா பிள்ளையிடம் உறவினர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுங்கள்... வந்தவர்களுக்கு காப்பித்தாண்ணி வாங்கித்தரனும் என்று கேட்டார். அதெல்லாம் எதுக்குய்யா.. இப்போதான் கிளம்பிருவோம்ல.. என்று மூக்கையா பிள்ளை மறுத்துவிட்டார். உறவினர் முணுமுணுத்துக்கொண்டே துண்டை வாயில் பொத்தியபடி மரப்பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார். மற்ற செலவுகளை இன்னொரு மகன்தான் செய்து கொண்டிருந்தார்.

                 உடம்பு தூக்கப்பட்டது. மலர்களைத் தூவி விட்டபடி முன்னாடி ஒருவன் செல்ல உடம்பின் பின்னே அனைவரும் வரிசையாகச் சென்றனர். மூக்கையா பிள்ளையும் மெதுவாக நடந்து சென்றார். இப்போது மனதில் சுப்பையா நாயக்கர்தான் இருந்தார். அவரின் இடத்தை வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம்தான் பணம் தேவை. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே வந்தார்.

                 மயானத்தில் எல்லாச்சடங்குகளும் முடிந்து கொள்ளி வைக்கப்பட்டது. 
                             மூக்கையாபிள்ளைக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. இறந்த மூத்த மகன் கொடுத்து வைத்திருந்த பணம் இவரிடம்தான் இருந்தது. அதையும் சேர்த்தால்  எப்படியும் சுப்பையா நாயக்கரின் இடத்தை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

                தீ இப்போது ”மளமளவென..” எரியத்தொடங்கியிருந்தது.