ரஷ்யாவில் சொல்லப்படுவதாக ஒரு கதை. இந்தக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கேள்விக்குறி” என்னும் நூலில் படித்தேன். பொய் சொல்லும் கலையை எளிதாகச் சொல்லக்கூடிய ஒரு கதை. படித்துப் பாருங்கள். சுவையாக இருக்கும்.
ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ஒரு மகன். அவன் சோம்பேறியாகவும் சாப்பாட்டு ராமனாகவும் இருந்தான். மகனுக்கு ஒரு திறமையும் இல்லையே என் விவசாயி கவலைப்பட்டான்.
ஒருநாள் அந்த கிராமத்திற்கு வந்த யாத்ரீகன் அந்த விவசாயியைப் பார்த்து “ நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் மகனுக்கு பொய் சொல்லக் கற்றுக்கொடு. பிறகு அவன் திறமைகள் தானே வளர்ந்துவிடும்” என்றான்.
தன் மகனை பயிற்சியில் சேர்ப்பதற்கு விவசாயி தன் ஊரில் அதிகம் பொய் சொல்பவன் எவன் என்று தேடினான். ஒரு குடிகாரனைக்கண்டு தன் நிலைமையை சொன்னான். அவனோ நான் பிழைப்புக்காக பொய் சொல்பவன். என்னைவிட அதிகம் பொய் சொல்பவன் கிராம நிர்வாகி. அவனிடம் சேர் என்றான். கிராம நிர்வாகியிடம் சென்றான். அவரோ நான் எம்மாத்திரம். என்னைவிட அதிகம் பொய் சொல்பவன் நாட்டின் மந்திரிதான். அவரிடம் அழைத்துச்செல் என்றார்.
மந்திரியோ வெட்கத்துடன் அப்படியெல்லாம் நான் நிறைய பொய் சொல்லிவிடவில்லை. என்னைவிட அதிகம் பொய் சொல்பவது இந்த நாட்டின் ராஜாதான். அவரிடம் அழைத்துச்செல் என்றார். ராஜாவோ பெருமையோடு ”நான் பொய் சொல்வதில் கில்லாடியாக இருந்தாலும் அவ்வளவு பொய் எல்லாம் சொல்லிவிடவில்லை”. ஆனால் நான் செத்தபிறகு என்ன ஆவேன்? சொர்க்கம் எப்படி இருக்கும்? நரகம் எப்படி இருக்கும்? கடவுளைக்கண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் தினமும் பொய்கூறி என்னையும் நம்பவைக்கிறாரே மதகுரு. அவர்தான் உலகிலேயே அதிகம் பொய் சொல்பவர். அவரிடம் அழைத்துச்செல் அன்றார்.
விவசாயிக்கு தலை சுத்தியது. விடாமுயற்சியாக தன் மகனை மதகுருவிடம் அழைத்துச்சென்றார்.
மதகுரு சொன்னார். எனக்கு பொய் சொல்லும் திறமை எல்லாம் கிடையாது. ஒரே ஒரு பொய்தான். அதை வேண்டுமானால் நான் கற்றுத்தருகிறேன். “ நான் சொல்வதெல்லாம் கடவுள் மீது சத்தியம்!”.
ஆஹா! இந்த ஒரு பொய் போதுமே வாழ்நாளை ஓட்டுவதற்கு என்று விவசாயி சந்தோசமாக தன் மகனை அழைத்துச்சென்றான்.
என்ன நீங்க எங்க கிளம்பிட்டீங்க? பொய் சொல்லவா! ம்ம்ம்... ஆனால் எனக்கு கடவுள் மீது சத்தியமா பொய் சொல்லவெல்லாம் தெரியாதுங்க.