வெள்ளி, ஆகஸ்ட் 17

செத்தாள் சப்பரம்

               சூரியன் கத்தரிக்கோலை எடுத்து வெட்ட ஆரம்பித்தால் அதிகபட்சம் அஞ்சு நிமிசம்தான்.. தலையிலுள்ள முடி காணாமல் போய் கிட்டத்தட்ட மொட்டைபோட்டு ஐந்து நாள் கழித்து தலையைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அவ்வளவுதான் முடி இருக்கும். இதற்காகவே அந்த ஊரிலுள்ள பெருசுகள் அவனிடம்தான் முடி வெட்டச் செல்வார்கள். அவர்களின் விவரம் அறியாத பேராண்டிகளையும் உடன் கூட்டிச் செல்வார்கள். விவரமறிந்த வாலிபர்கள் அவனிடம் முடி வெட்டச்செல்வதில்லை.

           சூரியன் வயிறு ஒட்டிப்போய் இருப்பான். அவனுக்கு எதற்கு அந்தப்பெயர் வந்தது என யாருக்கும் தெரியவில்லை. யாரும் அவனிடம் கேட்டதுமில்லை. அவனுக்கு முடி அடர்த்தியாய் நரைத்துப்போய் பரட்டைத்தலையுடன்தான் இருப்பான். ஒரு வேட்டி மட்டும் சுருட்டி சுருட்டி கட்டியிருப்பான். அந்த சுருட்டுக்குள்தான் முடிவெட்ட, மொட்டைபோட வேறெங்கும் போகும்போது தேவையான சாமான்களை வைத்திருப்பான்.
              
            சூரியனுக்கு தனியாகக் கடை எதுவுமில்லை. அந்த ஊரில் செத்தாளைத் தூக்கிச்செல்லும் சப்பரம் இருக்கும் இடம்தான் அவனது கடை. ஒரு மரப்பலகையில் அவன் இலாவகமாக குத்தவைத்து அமர்ந்து கொள்வான். இன்னொரு பலகையில் முடி வெட்ட வருபவர்களை அமரவைத்து வெட்டுவான். சின்ன பிள்ளைகளை அவன் மகனிடம் முடிவெட்ட வைப்பான். அவன் மகன் அப்போதுதான் முடி வெட்ட பழகி வந்தான். தன்னிடம் சிக்கும் சின்ன பையன்களின் இரத்தத்தை கண்டிப்பாக பார்க்காமல் அனுப்பமாட்டான்.

         அந்த இடத்தினை ஞாயிற்றுக்கிழமையில் பார்த்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒருபக்கம் தினத்தந்தி பேப்பரை ஆளுக்கொரு பக்கமாக எடுத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள். மறுபக்கம் வெட்டப்பட்ட முடி குவித்து வைக்கப்பட்டிருக்கும். அதில் சேவிங்கிரீம் அப்பிய காலண்டர் தாள்கள் கலந்து கிடக்கும். உள்ளே உயரமான சப்பரம் நிக்கும். அது இறந்தவர்களை சுமந்து செல்வதால் செத்தாள் சப்பரம் என்று பெயர். அந்த ஊரில் யாரிடம் கேட்டாலும் செத்த ஆளைத் தூக்கிச்செல்லும் சப்பரம் அதனால்தான் செத்தாள் சப்பரம் எனப் பெயர்க்காரணம் கூறுவார்கள்.

         செத்தாள் சப்பரத்தில் துரு ஏறியிருந்தது. அதன் நீலவண்ணம் மங்கிப்போய் இருந்தது. தூசு கொஞ்சம் படிந்திருந்தது. அந்த சப்பரத்தில் பிணத்தினை அமரவைக்கும் இருக்கை கழட்டி மாட்டும் வகையில் இருந்தது. அதன் கைப்பிடி தன் பளபளப்பினை இழந்திருந்தது.

           ஊரில் யாராவது இறந்துவிட்டால் சூரியன்தான் சப்பரத்தினை தள்ளிச்செல்வான். அதில் பூ அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு ரெடியாகும். இறந்தவர்கள் அந்த சப்பரத்தில் இருக்கும்போது கொஞ்சம் இராஜ தோரணைதான். என்ன...! கையை காட்டி வணக்கம் எல்லாம் போட முடியாது. இறுக்க வேட்டியை சுருட்டி கட்டப்பட்டிருக்கும். சூரியன் சப்பரத்தினை தள்ளிக்கோண்டு மயானம் கொண்டு சேர்ப்பான். அதைத்தள்ளும்போதே கெத்தாக உணர்வான்.  உடன் சிறுவர்களும் தள்ளிச் செல்வார்கள்.

        மயானத்தில் ஈமச்சடங்குகள் எல்லாம் அவன்தான் முன்னின்று முடிப்பான். அதில் அவனுக்கு பெருமையாகவே இருந்தது. ஊரில் யாராவது இறந்து விட்டால் சூரியன் ஒருவன் மட்டும் ரொம்ப சந்தோசமாகவே இருப்பான். சில நேரம் ஊரில் சாவே விழாது. அப்போதெல்லாம் முடிவெட்ட வருபவர்களிடம் எரிந்து விழுவான். மயானத்திலேயே சப்பரத்தில் கட்டிய பூவை எல்லாம் அறுத்து எரிந்துவிட்டு சுத்தம் செய்துவிட்டு காசுக்காக சண்டை போடுவான். சண்டை போடாமல் எந்த ஈமச்சடங்கையும் அவன் செய்ததில்லை. இறுதியில் அவன் கேட்ட காசு கிடைக்காவிட்டால் அசிங்க வார்த்தைகள் காதில் வந்து விழும். அவன் பேசும் வார்த்தைகளைச் செத்தவன் கேட்டால் மீண்டும் செத்துவிடுவான்.

          சூரியன் கடையில் இருக்கும்போது சப்பரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவான். தான் அதில் எப்போது போவோமோ என நினைத்து சிரித்துக்கொள்வான். விதவிதமான பிணங்களை அந்த சப்பரம் சுமந்து சென்றுள்ளது. அந்த பிணங்கள் சப்பரத்தில் உட்காரும் தோரணையும் விதவிதமாகவே இருக்கும். கைகட்டு, கால்கட்டு, வாய்கட்டு எல்லாம் போட்டுத்தான் பிணம் அதில் அமர்ந்திருக்கும். சூரியன்தான் சப்பரத்தில் இருக்கும் இருக்கையில் பிணத்தினை அமரவைத்து இறுக்கி கட்டி ஆகவேண்டிய காரியங்களைப் பார்ப்பான். துக்க வீட்டில் அதிகமாக ஒலிக்கும் பெயர் சூரியனாகத்தானிருக்கும்.

                சூரியன்தான் அந்த ஊரின் ஆஸ்தான முடி வெட்டுபவனாக இருந்தான். ஆனால் இப்போது புதிதாக ஒருவன் கடை ஆரம்பித்து நடிகைகளின் அரைகுறை ஆடைகளுடன் உள்ள படங்களைத் தொங்கப்போட்டு வாலிபர்களை கவர்ந்திழுத்தான். விதவிதமாக முடியை வெட்டி அழகுபடுத்தினான். முடியில் கலரிங் செய்தான். இப்போதெல்லாம் அந்த ஊரில்  கலர் கலர் தலைகளோடு இளைஞர்கள் வலம் வந்தார்கள். சூரியனின் மவுசு குறைந்தது.

     காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறித்தான் போய்விட்டது. இறந்தவர்களைத் தூக்குவதற்கும் இப்போதெல்லாம் டவுனிலிருந்து சொர்க்க ரதத்தை கொண்டு வந்தார்கள். வாடகை மூவாயிரமோ , நாலாயிரமோ அவரவர் வசதிக்கேற்ப வண்டியை அமர்த்தினார்கள். அதில் ஒப்பாரி பாடலையும் ஒலிக்கவிட்டு சோகத்தை இன்னும் கூட்டினார்கள். செத்தாள் சப்பரத்தின் மவுசும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அதனால் மயானத்தில் சூரியன் சண்டைபோட்டு காசு வசூல் பண்ண முடியவில்லை.

      சூரியனிடம் முடி வெட்ட வருபவர்கள் எண்ணிக்கை குறைந்ததில் அவனுக்கு வருத்தம்தான். சில பெருசுகள் மட்டும் நரைத்தலையுடன் முடிவெட்ட வருவார்கள். அவன் கருத்த முடியைப் பார்த்தே மாசக்கணக்கில் ஆனது. அதுவும் சொர்க்க ரதத்தில் இவன் ஆற்ற வேண்டிய கடமைகளும் அதிகமில்லை. எல்லாமே ரெடிமேடாக இருந்தது. இவனை யாரும் அவ்வளவாகத் தேடவில்லை. வண்டியின் முன்புறம் சங்கினை ஊதிச் செல்லுவான். மயானத்தில் இவனின் வேலையை அந்த ஊரில் உள்ள சில பெருசுகளே இவனைவிட அழகாகவே செய்ததால் இவனின் பெயரைக்கூறி யாரும் அழைக்கவில்லை.

         செத்தாள் சப்பரத்தினை ரொம்ப நாளாக வெளியே எடுக்காததால் பெயிண்ட் எல்லாம் உதிர்ந்து விட்டிருந்தது. துரு அதிகமாக ஏறியிருந்தது. சக்கரங்கள் இத்துப்போய்விட்டன. ஊரில் யாரும் பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை. சூரியனுக்கும் வயதாகிக்கொண்டிருந்தது. அவனின் நடையும் தளர்ந்துவிட்டது. கூடவே அவனை யாரும் அவ்வளவாக கண்டுகொள்ளாததால் கவலைவேறு சேர்ந்துவிட்டிருந்தது. சூரியனும் பலமுறை ஊர் பெரியவர்களிடம் செத்தாள் சப்பரத்தின் நிலையை எடுத்துக்கூறி கொஞ்சம் புதுப்பித்துத் தரும்படி கூறினான்.

             “இப்போ எல்லாம் யாருப்பா இந்த வண்டியை எடுக்குறாங்க...                                 எல்லோரும் சொர்க்க ரதத்தினை வாடகைக்கு கொண்டு வாராங்க...
    அந்த வண்டிதான் பிணத்தினை கொண்டுபோக வசதியாவும் இருக்கு...
       நாம எதுக்கு இந்த வண்டிக்கு வெட்டியா செலவு செஞ்சுக்கிட்டு.. 
       பேசாம விடுப்பா.. அதுவாட்டுக்கு இருக்கட்டும்”... என்றனர்.

தன்னையும் செத்தாள் சப்பரத்தினையும் ஊர்க்காரர்கள் தனித்து விடப்பட்டதாய் அவன் நினைத்தான். செத்தாள் சப்பரம் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருந்தது சூரியனைப்போலவே...