சனி, நவம்பர் 3

படிப்பு

         படிப்பு என்றால் என்ன? மனிதனை உருவாக்குவதே படிப்பு. அப்போ! படிக்காதவனெல்லாம் மனிதனில்லையா? பக்குவப்பட்ட, அறிவுடைய, சிந்திக்கும் திறனுடைய ஒருவனை உருவாக்குவதே கல்வி. உலகைப்பற்றி அறியவும் பலதரப்பட்ட சம்பவங்களை தெரிந்து கொள்ளவும்தான் படிப்பு உதவும்.
          அந்த படிப்பை ஒருவன் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துகிறனோ அவனே வெற்றியடைகிறான். என்னுடன் படித்தவர்களில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தனர். அதில் இன்னும் சிலர் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் சராசரி மதிப்பெண் எடுத்த பலர் வாழ்க்கையில் ஒரு நல்ல அல்லது வெற்றிகரமான நிலைமையை அடைந்துள்ளனர். ஏனெனில் நன்றாக படிக்கும் பலர் புத்தக அறிவு மட்டுமே போதும் என்றிருந்துவிட்டனர். அதற்குமேல் வாழ்க்கைக்கல்வி என்ற ஒரு விசயம் இருப்பதை மறந்தும் விட்டனர்.

வெள்ளி, அக்டோபர் 26

காக்கா பிடித்தல்

                    சிறிய வயதில் காகம் வடையைக் தூக்கிக்கொண்டு போன கதையில்தான் முதன்முதலாக காகம் அறிமுகமானது. அதில் காகமானது மற்றவர்களை ஏமாற்றும் என்றே கற்பித்தார்கள். பின்பு ஒரு கதையில் புத்திசாலியாக சித்தரிக்கப்பட்டது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஒரு காகம் அலையும் எனவும் சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு மண்பானையில் கல்லைத்தூக்கி போட்டு நீரை நிறையவைத்து தண்ணீர் குடித்துவிட்டு செல்லும். அப்போது முதல் காகத்தை நிறையவே நேசித்தேன். எங்கள் வீட்டு எதிரில் செல்லும் மின்கம்பியில் வரிசையாக காகம் அமர்ந்திருக்கும் அழகே தனிதான். ஆனால் இப்போது காகத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது. உண்மையிலேயே காகம் இனம் அழிந்துகொண்டு வருகிறதா எனத்தெரியவில்லை. வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைக்கும்போது எதுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ காகத்திற்கு பயப்படுவார்கள். ஆனால் அந்த காகத்தினை கூப்பிட்டு விரதமிடும் நாளில் மட்டும் உணவும் வைப்பார்கள். (ஆனா வடாம் திங்கக்கூடாது.. என்ன ஞாயம் இது) சிலர் தினமும் உணவு வைப்பதை கண்டிருக்கிறேன்.