செவ்வாய், மே 13

பூப்பதெல்லாம்...

      ஓவியா பதிப்பகத்தார் வெளியிட்ட விமலனின் “பூப்பதெல்லாம்..” என்ற சிறுகதைத்தொகுப்பினை சமீபத்தில் படித்தேன். அது சிறுகதைத்தொகுப்பு என்பதைவிட நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சகமனிதர்களைப் பற்றியது எனச் சொல்லலாம்.
    விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த விமலன் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் சிட்டுக்குருவி என்ற வலைப்பூவில் சமூகம் சார்ந்த பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். நல்ல மனிதரும்கூட.. இவரின் முந்தைய வெளியீடுகள் வம்சி பதிப்பகத்தின் “காக்காச்சோறு”, அலமேலு பதிப்பகத்தின் “தட்டாமாலை”, வம்சி பதிப்பகத்தின் “வேர்களற்று”..


   அவரின் பதிவுகள் பெரும்பாலும் வாழ்வியல் சார்ந்தும் நம்மோடு பயணிக்கும்படியான தொனியில் கதைகள் அமைந்திருக்கும். தேநீர்கடை, சலூன்கடை, பலசரக்குக்கடை, மில் தொழிலாளர்கள் என்று நாம் அன்றாடம் பழகும் மனிதர்களைப்பற்றியும் அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் பதிவு செய்திருப்பார்.
    பூப்பதெல்லாம்.. என்ற இந்த நூலில் “பரந்து விரிந்து கிடந்த கரிசல் பூமியில் சட்டையில்லா வெற்று மேனியில் இறுக்கிக்கட்டிய தார்ப்பாய்ச்சியுடன் விதை தூவிப்போய்க்கொண்டிருந்த பாலா அய்யாவின் பின்னால் நானும், கிட்ணண்ணனும், பெரியாம்ளயும் ஒன்றன்பின் ஒன்றாகவும், வரிசை காட்டியுமாய் ஏர்பிடித்து விதைப்பு உழவு உழுதுபோன காலங்களும்… “ என்கிற விதமாய் இவரைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாங்கு நம்மோடு வாழும் சகமனிதனின் கதையை சொல்லப்போகிறார் என்ற எண்ணத்தினை நமக்கு கொண்டுவருகிறது. 
    வெல்லக்கட்டி என்ற கதையில் ”உப்புமீது துவரம்பருப்பும், பருப்புமீது அரிசியும் அரிசிமீது காய்கறிகளும், எண்ணெய் டின்னின்மீது வெல்லக்கட்டிகளும்..” என்று காசியப்பனின் கடையினை விவரித்திருக்கும் பாங்கு நான் சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த்த கடையினை அப்படியே காட்சிப்படுத்துகிறது.
    வல்லினம், மெல்லினம் என்ற கதையில் ஆயில் மில்லைப்பற்றியும் அதில் வேலைபார்க்கும் மனிதர்களையும் கண்முன் கொண்டுவருகிறார்.
ஒவ்வொரு கதைக்கும் வைத்திருக்கும் பெயர் வித்தியாசமானதுதான். வாட்டர் ஸ்பிரெயர், ஸ்கிரீன் ஷேவர், சுழியிடம், கத்தரிப்பான், விலாசம் என்று பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.
    நாணல் புல்.. ஒரு பெண்ணின் மீள் நினைவுகள், அவள் சேலைகட்டியிருக்கும் பாங்கு அந்த சேலையின் நிறம், டீக்கடையில் அவள் வந்துபோகும் காட்சிகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் கதைக்குள்ளிருந்து நிஜ உலகத்திற்கு கொண்டுவந்துவிடுகிறது.
     இன்னும் நிறைய சொல்லலாம். மொத்தம் 21 கதைகள். ”மேனிபருத்த வேப்பமரம் – அது உதிர்த்த பூக்கள், மஞ்சளும் வெள்ளையும் கலர் காண்பித்து கிடப்பவைகளை இன்று எப்படியும் கூட்டிவிடவேண்டும். நேற்று நினைத்து முடியாமல் போனதை இன்று செயலாக்கிவிட வேண்டும். பூப்பவையெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?”

     இந்தப் புத்தகத்தில் பூத்த பூக்களையெல்லாம் பட்டியிலிடவும் முடியாது. நீங்கள் படித்துப்பாருங்கள். நம்மோடு பயணிக்கும் சகமனிதனின் வாழ்க்கையை நீங்களும் ரசித்து அவனின் சோகத்தை கொஞ்சம் பகிர்ந்தும் கொள்ளுங்கள். 

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
BATLAGUNDU- 642 202.
TAMILNADU

வியாழன், ஏப்ரல் 10

வேப்பமரத்தின் மனம்

    ப்ஊ.. ப்ஊ... தூசியை வாயால் ஊதினேன். அப்பப்ப்ப்பா.. மேஜையில் எவ்வளவு தூசு. ஒருவழியாக சுத்தம் செய்தபின் மேஜையையும் நாற்காலியையும் இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.
ஜன்னலின் ஓரம் அமர்ந்து கவிதை எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
கவிதையா..! 
என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது.
கவிதை மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வேப்பமரத்தின் ஒரு சிறிய கிளை ஜன்னலின் அருகே என்னையே உற்று பார்ப்பதுபோல் இருந்தது. அதை சட்டை செய்யாமல் எழுதினேன். மீண்டும் மனசுக்குள் ஒரு உறுத்தல். என்னைத்தான் பார்க்குமோ என்று சற்று நிமிர்ந்து பார்த்தேன். தலையைத் திருப்பிக்கொண்டது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் எழுதத்துவங்கினேன். இப்போது மெல்லிய குரலில் சத்தம் கேட்டது. 
யாரது? என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தேன். 
மரமேதான்... ஆச்சரியம் மேலிட என்ன என்று புருவம் உயர்த்தினேன்.
எப்போது பார்த்தாலும் எழுதுகிறாயே..! அப்படி என்னதான் எழுதுவாய் என்று கேட்டது.
என் தனிமையை போக்கவும், எனக்குள் தோன்றும் சில கருத்துக்களையும் எழுதுவேன் என்றேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற வேப்பமரம்..
நீ கருக்கொண்டிருப்பாயோ!
இத்தனை வார்த்தைகள்
உனக்குள் பிறக்கின்றன.
என்று கூறியது.
வேப்பமரத்தின் பேச்சு எனக்கு வியப்பினை தந்தது.
என் மனதில் வார்த்தைகள் ஊறிக்கொண்டிருக்கும் என்றேன்.
உடனே அது மனத்தினை எப்போதும் குப்பைபோல நிறைத்திருப்பாயோ என்று கேட்டது.
எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.
காலியான மனம் ஒன்று உண்டா? என்று கேட்டது.
கண்டிப்பாக இருக்க முடியாது என்றேன்.
அது சிரித்தபடியே பொருட்களை வாங்கி வீட்டினை நிரப்புகிறீர்கள். சொற்களை வாங்கி மனசை நிரப்புகிறீர்கள் என்றது.
எண்ணங்களும் மனசை நிரப்பும் என்றேன்.
எதை எண்ணுவீர்கள்?
காதலி, குடும்பம், ஊர், வேலை பார்க்கும் இடம், அன்றாட நிகழ்வுகள் இப்படி எதையாவது எண்ணுவேன். மனம் எப்போதும் எதையாவது அசைபோட்டுக்கொண்டு இருக்கும்.
நடந்தவை
நடந்துகொண்டிருப்பவை
நடக்கப்போகின்றவை
யோசித்துக்கொண்டேயிருக்கும்
மனம்.
அதற்கு ஓய்வில்லை என்று சொன்னவுடன்…
வேப்பமரம் ஆமோதிப்பதுபோல் கிளையை அசைத்தது.
மனிதன் மட்டுமே இப்படி மனசை உலட்டியபடி அலைகிறான். அவனுக்குள் எப்போதும் திராவகம்போல் எண்ணங்கள் அரித்துக்கொண்டே இருக்கவேண்டும். மனம் வெறுமையாய் இருந்தால் அவன் இறந்துபோய்விடுவான். அவன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் மனம் மட்டுமே என்றது.
வெறுமையான மனம் என்று ஒன்று கிடையாது. மனிதர்கள் குப்பைகள் என்றது.
நான் என்னுடைய எண்ணங்களை இலைகளாக முளைக்கச்செய்து, தேவையில்லாதவற்றை உதிரச்செய்வேன் என்றது. நாங்கள் அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக்கி மனசுக்குள் புதைத்துவைக்கிறீர்கள். அவை கை கால்களுடன் முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டிருந்தது.
அப்போது ஓங்கி வீசிய காற்றில் அந்தக்கிளை முறிந்து விழுந்தது.
நான் அமைதியானேன்.
மனம் மீண்டும் யோசிக்கத்தொடங்கியது.