சனி, மார்ச் 21

காக்காச்சோறு

           விமலனின் காக்காச்சோறு தலைப்பு என்னைக் கவர்ந்தது. இந்த தலைப்பைக் கேள்விப்பட்டவுடன் கவிஞர்  அப்துல் ரகுமானின் காக்கைச்சோறு எனும் கவிதை நூல்தான் எனக்கு ஞாபகம் வந்தது. காக்கைகள் நாம் உணவு வைத்தவுடன் கூட்டமாக வந்து தன் உணவைப்பகிர்ந்து கொள்ளும் என்றுதான் நாம் நினைக்கிறோம். அதில் விஷம் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் காக்கைகள் தன் இனத்தைக் கூப்பிட்டு சோதித்துப்பார்க்கும் என்று கவிதை நடையில் நாம் யோசிக்காத தெரிந்திருக்காத வகையில் அப்துல் ரகுமான் புது விளக்கம் தந்திருப்பார்.

              விமலனின் காக்காச்சோறு நூலில் இடம்பெற்ற  அதே தலைப்பிலான கதையில் காக்காவிற்கு சோறு வைப்பதும் அது சினேகத்துடன் பழகுவதும் அழகான நடையில் எழுதியிருப்பார். கதையின் இடையில் அரிசி ரகங்களை சொல்லி அவர் அடிக்கும் கமெண்ட் அருமை. கதை முடிவில் அவர்கள் டவுனுக்கு போனதும் காட்சிகள் மாறி காக்கைகளுக்கு நேரும் கதியினை எழுதி முடித்திருப்பார்.

                 நீர்க்குமிழி எனும் சிறுகதையில் தாலி அறுத்தவளின் மனநிலையை அழகாக விவரித்திருப்பார். கிராமத்தில் இதுபோன்ற நிலைமை இன்னும் தொடரத்தான் செய்கிறது. ராமு அண்ணன், அவரின் பாட்டி போன்றோரின் உழைப்பினை கிராமத்துப்பாணியில் விமலன் அழகாகக் கூறியுள்ளார். முடிவில் “தாலி அறுத்தவ தலைவிதி அதுதான்” எனும்போது நெஞ்சு கனக்கிறது.

             இடக்கரடக்கல் எனும் கதையில் வனராஜன் எனும் பெயரை அறிமுகப்படுத்தும் பாங்கு அலாதியானது.

         வாய்க்கரிசி எனும் கதையில் ஒரு டெய்லரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரித்திருப்பார். எங்கள் ஊரில் நான் பார்த்த ஒரு டெய்லரும் இதே பாணிதான். இந்தக்கதையில் வரும் டெய்லர் குடிகாரராக மாறவும் வீட்டின் நிலைமையே மாறுகிறது. தினமும் அவன் டீக்குடிக்கும் கடை, அங்கு டிபன் சாப்பிட அவன்படும்பாடு, ஒரு கட்டத்தில் அவனுக்கு டீ கொடுக்கக்கூடாது என முடிவெடுக்கும் முதலாளி , டெய்லரின் பிள்ளைகள் என கதையின் ஒவ்வொரு பாத்திரமும் கவனத்தை ஈர்க்கிறார்கள். இறுதியில் அவன் இறந்ததும் மனைவியும், பிள்ளைகளும் வாழ வேண்டிய வயது என முடித்திருப்பார்.

       வேனற்காடு எனும் கதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் விமலன். நல்ல எழுத்து நடை. சந்தேகப்புத்தி எனும் விஷவிதை ஒட்டு ரகம், வீரிய வித்து, கலப்பின வித்து எதனிதனையும் தாண்டியதாக அவனுள் விழுந்து துளிர்விட்டிருந்தது எனும் அவரது நடை வாசிக்க சுகமானது.


                    காக்காச்சோறு நூலில் மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொரு கதையை பற்றியும் எழுத எனக்கு ஆசைதான். அது படிப்பவர்களுக்கு அயற்ச்சியைத் தரும். விமலனின் கதையில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள், டீக்கடை, உடன் பணியாற்றுபவரின் மனநிலை என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தி இருப்பார். இந்த நூலில் சில கதைகளின் தலைப்பு நமக்கு ஆச்சர்யமூட்டும். ஒத்தப்பனை, உப்பாங்காத்து, உள்கூடு, விருசல், இடக்கரடக்கல், சனாதனங்கள் எனப்பட்டியல் நீளும். வம்சி புக்ஸ் நிறுவனத்தார் விமலனின் காக்காச்சோறு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

புதன், பிப்ரவரி 11

அப்பாவி அப்புச்சாமி

தன் நண்பனிடம் பீற்றிக்கொண்டிருந்தான் அப்புச்சாமி.

என் மனைவி என்னைக்கண்டாலே பயப்படுவா தெரியுமா!
பகல் முழுவதும் வேலை செய்கிறாளே.. பாவம்னு நான்தான் காலையில் அவளுக்கு டீ போட்டு கொடுத்து எழுப்புவேன். அப்புறம் அவளுக்கு வெந்நீர் வைத்துக்கொடுத்துவிட்டு காய்கறி வெட்ட ஆரம்பித்துவிடுவேன்.

ஓ! அதுசரி.. மனைவிக்காக இதுகூட செய்யக்கூடாதா! என்றான் நண்பன்.

காய்கறி வெட்டியபின் போனால்போகுது என்று சமையலையும் நானே செய்துவிடுவேன். என் சமையலை சாப்பிட்டுதான் அவள் இப்படி அழகா இருக்கிறாள் தெரியுமோ! என்றான் அப்புச்சாமி.

அப்போ உன் மனைவி என்னதான் செய்வாள் என்று அப்பாவியாக கேட்டான் நண்பன்.

அவளுக்கு நிறைய வேலை இருக்கும். அதான் பிள்ளைகளைக்கூட நானே பள்ளிக்கு கிளப்பிவிடுவேன் என்று அப்புச்சாமி கூறினான்.

ஆமா.. உன்னைக்காண்டாலே உன் மனைவி பயப்படுவான்னு சொன்னியே!


ஆமா! என் மனைவி என்னையைக் கண்டாலே பயப்படுவா! அதான் நான் காலையில் எல்லா வேலையும் முடித்துவைத்துவிட்டு உடனே ஆபிஸுக்கு கிளம்பிவிடுவேன். அப்புறம்தான் அவள் எந்திருப்பாள் தெரியுமா?

ஓ! உன் மனைவிக்கு உன்மேல் அவ்வளவு பயமா! என்று ஆச்சரியப்பட்டன் நண்பன், சரி...மாலையிலாவது அவள் வேலை செய்வாளா?


நோ..நோ.. அவள் வேலை செய்து ஏதாவது தப்பாகிவிட்டால் நான் பொல்லாதவனாகிவிடுவேன். அதான் நான் வரும்வரை அவள் எந்த வேலையும் செய்யமாட்டாள். 

ஓஹோ... நீ வந்தப்புறம் செய்வாளோ?

என்ன இப்படி கேட்டுவிட்டாய். நான் வந்தப்புறம் அவள் எதுக்கு வேலை செய்யனும். நானே பார்த்துக்கொள்ள மாட்டேனா!
மாலையில் வந்தபின் பாத்திரம் விளக்கிவைத்துவிட்டு டீ போட்டு கொடுப்பேன். என்னுடைய டீயை ரசித்து குடிப்பாள் தெரியுமா!

அவ்வளவு நல்லா டீ போடுவியோ என்றான் நண்பன்.


பின்ன டீ நல்லாயில்லைனு அவ சொல்லிட்டா பின்ன எப்பவுமே போடமாட்டேன் என்று கோபமாக அப்புச்சாமி சொன்னான்.
இரவு டிபன் நான் நல்லா செய்வேன்னு என் மனைவி அடிக்கடி சொல்வாள். தினமும் விதவிதமா அவளுக்கு சமைத்து கொடுப்பேன். இதுக்காகவே சமையல் குறிப்பு பத்து புத்தகம் வைத்திருக்கிறேன் தெரியுமா! அப்புறம் டிவியில் சமையல் நிகழ்ச்சி போட்டால் தவறாம நான் பார்ப்பேன் என்று அப்புச்சாமி தம்பட்டம் அடித்தான்.

அவன் நண்பனுக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியாமல் முழித்தான்.

நீ சொல்வதைப்பார்த்தால் உன் மனைவி உனக்கு பயப்படுற மாதிரி தெரியலையே.
பயங்கரமா பயப்படுவா..! அதான் இரவுகூட அவ என்கூட தூங்க மாட்டாள். நான் வராந்தாவில் படுத்துக்கொள்வேன். என்னைக் கண்டால் அவளுக்கு அவ்வளோ பயம் என்று சொல்லிக்கொண்டே போனான் அப்புச்சாமி.

நண்பன் தலையைச்சொறிந்து கொண்டான். 

அப்போது அப்புச்சாமியின் மனைவியின் குரல் கேட்டது.

இன்னுமா பேசிக்கிட்டு இருக்கீங்க. வந்து பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுங்க என்று கத்தினாள்.

பார்த்தியா நண்பா.. வீட்டுபாடம் அவள் சொல்லிக்கொடுத்தால் மார்க் குறைஞ்சிரும்னுதான் என்னைச் சொல்லி கொடுக்கச் சொல்றா. என்மீது அவளுக்கு அவ்வளவு பயம் .


ஆமா அப்புச்சாமி . உண்மையிலேயே  உன்மீது உன் மனைவிக்கு ரொம்பவும் பயம்தான். கொஞ்சம் கோவம் வராமல் பார்த்து நடந்துக்க என்று நண்பன் அப்புச்சாமியை பார்த்து கவலைப்பட்டான்.


அப்புறம் நண்பா.. நீதான் நிறைய ஊர் சுத்துறயே... அதனால் எங்காவது ”வெயிட்லெஸ் பூரிக்கட்டை கிடைச்சா ஒன்னு வாங்கிட்டு வா” என்று அப்பாவியாகத் தலையைத் தேய்த்துக்கொண்டே அப்புச்சாமி கூறவும் அவன் மனைவியின் குரல் திரும்பவும் ஒலிக்கவும் சரியாக இருந்தது. 
இதோ வந்துட்டேன்  என்று அப்புச்சாமி வேகமாக வீட்டிற்குள் ஓடினான்.