சனி, பிப்ரவரி 16

நானும் ஆவிதான்


      என்னுடைய பிரச்சனையைத் தீர்க்க மருத்துவரிடம் சென்றுதான் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். விசாரித்துப் பார்த்ததில் டாக்டர் ஆவிதாசன்தான் சிறந்த மருத்துவர் என எல்லோரும் கூறினர். அவருடைய பெயரே வித்தியாசமாக இருந்தது. அவர்தான் ஆவிகளுடன் பேசுபவராம். இரவு எட்டு மணிக்கு அவருடைய மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையைச் சுற்றிலும் புகைமண்டலமாக இருந்தது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா ! யோசித்தவாறே சென்றேன்.
     மருத்துவர் என்னை அழைத்து இருக்கையில் அமரவைத்தார்.
    " உங்களுக்கு என்ன பிரச்சனை?" டாக்டர் விசாரித்தார்.
     எனக்கு சில வாரங்களாக எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
     என்ன வித்தியாசம்?
     யாரைப்பார்த்தாலும் பேய் மாதிரி தெரிகிறது. பல் நீண்டும், முடியை விரித்துப் போட்டவாரும் தெரிகிறது. எங்குபார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது.

         எப்போதிருந்து?
     இரண்டு வாரத்திற்குமுன் டூவீலரில் செல்லும்போது கீழே விழுந்துவிட்டேன். தலையில் அடிபட்டது. அப்போதிருந்துதான்…
ஓ! அப்போ இது சாதாரண பிரச்சனைதான்.
     “சாதாரண பிரச்சனையா !” என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால்தான் உங்களுக்கு இந்த பிரச்சனையின் வீரியம் புரியும்.
      சரி...! வேறெதாவது உங்களுக்கு வித்தியாசமாகத் தோணுகிறதா?
    ஆமாம்.. முருங்கை மரத்தினைப்பார்த்தால் தொங்கவேண்டும்போல் உள்ளது. யாரையாவது பிடித்து ஆட்டவேண்டும்போல் இருக்கிறது. எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. சிலநேரம் ரத்தம் குடிக்கவேண்டும்போல் உள்ளது. இப்போது உங்களைப் பார்த்தால்கூட ஆவி மாதிரிதான் தெரிகிறது.
      டாக்டர் சிரித்தார்.
      சார்.. நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கிறீங்க !
      “வீட்டிற்கு போக பிடிக்காதே?” டாக்டர் அன்பாக விசாரித்தார்.
      அட! ”ஆமாம் சார்” என்றேன்.
      சுடுகாட்டுக்கு இப்போ தனியா பயமில்லாமல் போவீங்களே?
      ஆமாம்..ஆமாம்.. இதுக்கு என்ன சார் ட்ரீட்மெண்ட்? சரியாயிடுமா?
    இதுக்கு மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. இது நார்மல்தான்..
    என்னது நார்மலா!
    ஆமாம் ஆவியா இருந்தால் இது நார்மல்தானே.. மனிதர்கள்தான் பயப்படுவார்கள்.
    “ஆவியா? நானா?” ஆச்சரியமாகவும் பயத்துடனும் கேட்டேன்.
    ஆமாம்.. நீங்கள் தலையில் அடிபட்டு இறந்துவிட்டீர்கள். இப்போது ஆவிகள் உலகத்தில் இருக்கிறீர்கள்.
     அப்போ நீங்கள் மட்டும் எப்படி இங்கே? ஆவிகளுடன் பேசுகிறீர்கள்...
    ஹாஹா....ஹா.. என சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் ஆவிதான். புதிதாக ஆவிகள் உலகத்திற்கு வருபவர்களுக்கு இதுதான் பிரச்சனை. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கத்தான் இந்த டாக்டர் ஆவிதாசன்.
     ஆவி அரண்டு போய் அமர்ந்து இருந்தது.



வியாழன், ஜனவரி 17

பூ..காய்..பருத்தி

”நல்லவேளை
பரிமாறும்போதே
பசியாறிவிட்டேன்”

          இத்தனை நாள் ஒழுங்காய்தானே இருந்தான். எங்கிருந்து வந்தது இந்த காதலும், கத்தரிக்காயும். அப்பாவின் கைபிடித்துக்கொண்டுதான் அலைவான். அப்பாதான் அவனுக்கு எல்லாமும்... அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் அப்பாதான். இப்போது அவனிடம் கேளுங்கள்.. உன்னுடைய முதல் எதிரி யாரென்று? நிச்சயம் அப்பாதான்.

”எந்த ஒளி பட்டால்
இந்த பூ பூக்கும்”

           அவளுக்கு எல்லாமே அம்மாதான். அம்மா அவளுக்கு தலையில் அழகாக ரெட்டை ஜடை பின்னி, சிவப்பு கலர் ரிப்பன் கட்டி, கனகாம்பரம் பூச்சூடி அழகு பார்ப்பாள். அம்மாதான் உலகம். அம்மாவிற்கு பிடித்த எல்லாமும் இவளுக்கும் பிடிக்கும். இப்போது அவளிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு பிடித்தது யாரென்று? நிச்சயம் அம்மா இல்லை.

மண்ணும் கருக்கொண்டது
மழைநீர் புகுந்ததால்!


        அவளின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. அவனுடைய சைவ நினைவுகள் அசைவமாக மாறிக்கொண்டிருந்தன. திமிர் பிடித்த கரையானாய் அவன் மனசை அரித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது கேட்டுவிடவேண்டும். நீ என்னை காதலிக்கிறாயா? கண்ணாடி முன்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது.
   
”பறந்துவந்த ஒரு
அசைவ விமானம்
கொத்தத்தொடங்கின
அவள் இதயத்தை”

       இவன் எல்லோரையும் போல்தான் சைக்கிள் ஓட்டுகிறான். பிறகு ஏன் இவன் மட்டும் என் மனதில் புகுந்தான். ஒருவேளை பறக்கிறானோ! மனப்பிரமையா? அவளாக மனதில் கேட்டுக்கொண்டாள். இவள் சைக்கிளை உரசியபடி வேகமாகப் பறந்துசெல்வான். திடீரென மனசையும் உரசிச்சென்றுவிட்டான்.

“சத்தியமாக
இயல்பாகத்தான் இருக்கிறேன்
பலதடவை சொல்லிக்கொண்டான்
சொரணையில்லாமல்”

       குளியலறைக்குள் புகுந்துகொண்டால் பச்சைத் தண்ணீர் சுடுதண்ணீர் ஆகும்வரை குளித்தான். தலைமுடியை சீவ ஆரம்பித்தால் சீப்பு நுனி தேயும் வரை சீவிவிட்டு பின்பு முடிகலைத்துதான் செல்வான். சாப்பிட்டுவிட்டு பசிக்குது என்பான். இப்போதெல்லாம் ஆடையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். அவள் உடுத்தும் ஆடையின் நிறத்தில் அள்ளிக்குவித்தான்.
       
“ பால் கொதித்தது
ஆவியானான் அவன்”

        அவளுக்கு ஜன்னல் வீடானது. இப்போதெல்லாம் தலைகீழாகவே படிக்க ஆரம்பித்துவிட்டாள். வெறும் தட்டில் சாப்பிட ஆரம்பித்தாள்.  அடுப்பில் பாலை பொங்கவிட்டு வேடிக்கை பார்த்தாள். கண்கள் நிலைகுத்தி தன்நிலை மறந்தாள். பில்லி சூனியமோ என நினைத்து வீட்டில் பயந்தார்கள். அது  அந்த ஆண்பிள்ளையின் சூனியம்  என அறியாமலேயே!

”பழம் அழகுதான்
வண்டுதான் குடைந்துகொண்டிருந்தது”

இருவரும் மனசைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை அவர்களை தொலைத்துவிட்டிருந்தது.

“இதயம் வரைந்துகொண்டிருந்தேன்
ஒடிந்தது பென்சிலும்”
 
      இருவருக்கும் மதிப்பெண் குறைந்தது. வீட்டில் காது நிறைந்து வழியும்படி திட்டு விழுந்தது. பள்ளி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, நண்பர்கள் சரியில்லை, நேரம் சரியில்லை, ஊரே சரியில்லை என்று பலவாறு சிந்தித்தனர் அவன் வீட்டாரும், அவள் வீட்டாரும். அவர்களுக்கு யார் சொல்வது? இருவருக்கும் ஹார்மோன் சரியில்லை என்று.

“நான் பார்த்தேன்
புள்ளியாய் நீ
அங்கிருந்து
நீயும் பார்
நானும் புள்ளிதான்”