செவ்வாய், செப்டம்பர் 20

ருசிக்கத் தெரிந்த குரு...

இந்த உலகத்துல வாழ்ந்து என்ன சுகத்தைக்கண்டேன்?" என்று அலுத்துக் கொள்கிறவர்கள் ஏராளம்!.  
"ஆகா...என்ன அற்புதமான உலகம்!" என்று ஆனந்தப்படுபவர்கள் குறைவு!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுகம்தான்!
இங்கிலாந்து நாட்டில் ஒரு கவிஞர் இருந்தார். அவர் பெயர் "ஜார்ஜ் பர்ன்ஸ்".
அவருக்கு 95-வது பிறந்த நாள்.
நண்பர்கள் எல்லோரும் வந்தார்கள். வாழ்த்தினார்கள்.
ஒரு நண்பர் கேட்டாராம்:
"இந்த 95 -வது வயது எப்படி இருக்கிறது?"
உடனே கவிஞர் உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தாராம்.
"சொல்றேன் கேளுங்க...இதற்கு முன் எப்போதும் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அற்புதமாகக் காதலித்ததில்லை!" என்று சொல்லி நிறுத்திவிட்டு , "இன்னொரு ரகசியம் ... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அதிகமாகப் பொய் சொன்னதில்லை !" என்றாராம்.
கூட்டம் 'கொல்'லென்று சிரித்ததாம்.
 அந்தக் கவிஞருக்கு வாழ்க்கை ஒரு சுமையாகத் தெரியவில்லை. சுகமாகத் தெரிகிறது.
வயதான குரு ஒருவர்... அவருக்கு100 வயது. வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கிறார்.
சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சீடர் வேகமாக வெளியே ஓடுகிறார். குரு வழக்கமாக விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வருகிறார்.குருவிடம் நீட்டுகிறார்.அவர் ஆவலோடு அதை வாங்கிச் சாப்பிடுகிறார். சாப்பிட்டுவிட்டு அந்தச்சீடரை அருகில் அழைக்கிறார். ஏதோ கடைசி உபதேசம் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் சீடர் அவர் அருகில் குனிகிறார்.
குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. "ஆகா! என்ன ருசி!" என்று சொல்லிவிட்டுத் தன் கண்களை மூடிவிடுகிறார்.
சீடருக்கு அந்த குருவின் உபதேசம் புரிகிறது.
அந்தக் குருவுக்கு வாழ்க்கையின் கடைசி விநாடி கூட ருசியாக இருந்திருக்கிறது!
வாழ்வின் கடைசி விநாடியைக்கூட ருசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த குருவிம் உபதேசம்!
அப்படி ஒரு மனத்தெளிவை உண்டு பண்ணுவதுதான் உண்மையான ஆன்மீகம்!
ந்ண்பர்களே!
வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை!

                                                             - தெங்கச்சி கோ.சுவாமிநாதன்

4 கருத்துகள்:

  1. அருமையான கதை...

    அதைத் தாங்கள் எடுத்துரைத்த விதம் அருமை..

    நெகிழ்ந்துபோனேன்..

    நிகழ்காலத்தில் வாழக்கற்றுக்கொள் என்பதைக் கதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறது!!!!!!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள கருத்துக்கள் நன்றி பல..........

    பதிலளிநீக்கு
  3. "வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
    பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை!"
    Arumai.

    பதிலளிநீக்கு