சனி, ஜனவரி 14

அப்போ ஒரு சொல்...இப்போ ஒரு சொல்

         கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலில் இருந்து வேற்றுமொழி என்னும் தலைப்பில் ( தமிழில் சுரா).. . சோதிடரின் முகமூடியை கிழிக்கும் அதேவேளையில் ஒரு குழந்தையின் மனநிலையை, எதுவாக ஆக வேண்டும் என்ற நிலையை குழந்தையின் எண்ணமாக அவர் சொல்லும் விதம் வியக்கவைக்கும். நான் படித்து ரசித்த விசயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
          பிறந்து மூன்றாவது நாள் நான் பட்டு மெத்தையில் படுத்துக்கொண்டு சுற்றிலும் ஆச்சரியத்துடன் பார்த்தபோது, என் தாய் வேலைக்காரியிடம் கேட்பது காதில் விழுந்தது : என் குழந்தை எப்படி இருக்கிறது.'
        வேலைக்காரி பதில் சொன்னாள் : ' நல்ல குழந்தை. இந்த அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்த குழந்தையை நான் இதுவரை  பார்த்ததே இல்லை.'
         நான் கவலையுடன் சொன்னேன் : ' இது உண்மையில்லை அம்மா. என் படுக்கை மிகவும் தடிமனாக இருக்கிறது. பால் குடித்த  என்  வாயெல்லாம் கசக்கிறது. உங்களின் மார்பில்  துர்நாற்றம்... அய்யோ...  எனக்கு  தலை சுற்றுகிறது.  நான்  மிகவும்  கவலையில்  இருக்கிறேன்.
         நான் சொன்னது என் தாய்க்கு புரியவில்லை. நான் பேசிய மொழி இந்த உலகத்தில் இருப்பதல்ல.
           இருபத்தொன்றாவது நாள் பாதிரியார் வந்தார். அவர்  என்  தாயிடம் சொன்னார். ' நீ மிகவும் கொடுத்து வைத்தவள். உன் மகன் பெரிய தர்ம பிரபுவாக ஆவான். அதுகுறித்து  நீ  சந்தோசப்படலாம்.'
         அவருடைய  மொழிகளைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம் சொன்னேன் : 'உங்களின்  இறந்துபோன  தாய்  அப்போது  மிகவும் கவலைப்பட்டிருக்க வேண்டும்.  நீங்கள் அந்த அளவிற்கு தர்மசிந்தனை கொண்டவரில்லையே!'
             என் மொழி அவருக்குப் புரியவில்லை. 
         ஏழு மாதங்கள் கழிந்ததும், ஒரு சோதிடர் வந்து என் தாயிடம் சொன்னார் : உங்களுடைய மகன் பெரிய ராஜதந்திரியாக ஆவான்.  மற்ற மனிதர்களுக்கு அவன் ஒரு உதாரணமாக இருப்பான்.'
           அதைக்கேட்டு எனக்கு கோவம் வந்தது. நான் சொன்னேன் ; ' அவருடைய தீர்க்க தரிசனம் முழுவதும் முட்டாள்தனமாக இருக்கிறது.  நான் ஒரு பாடகனாக ஆவேனே தவிர , அதைத் தாண்டி எதுவுமாக ஆக வாய்ப்பேயில்லை.'
              என் மொழி அன்றும் யாருக்கும்  புரியவில்லை.
              இப்போது எனக்கு முப்பது வயது.  என் தாய், வேலைக்காரி, பாதிரியார் எல்லாரும் மறைந்து விட்டார்கள். அந்த சோதிடர் மட்டும் உயிருடன் இருக்கிறார். அவரை  நேற்று  நான் கோவில் வாசலில் பார்த்தேன். பேச்சுக்கு மத்தியில் அவர் சொன்னார் : " நீங்கள் ஒரு பாடகனாக வருவீர்கள் என்று அப்போதே  நான்  சொன்னேன்.'
            நான் அவர் சொன்னதை கண்களை மூடிக்கொண்டு நம்பினேன். ஏனென்றால் என்னுடைய பழைய மொழி எனக்கு இப்போது அன்னியமாகி விட்டது.
 

4 கருத்துகள்:

  1. சமூகத்தில் இதுமாதிரியான விதைப்புகள் நிறய இருக்கிறது.தவறான கருத்து விதைப்புகளுக்கு ஆளாகி விதிவசம் எல்லாம் என நினைத்து ஒரு மிகப்பெரிய செக்சனே இருப்பது நம் நடப்பு சமூகத்தின் மிகப்பெரிய அவலம்.

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு மிகவும் நன்றி. இப்படித்தான் சில எதிர்காலக்கணிப்புவாதிகளால் பல குழந்தைகளின் எதிர்கால வாழ்வு திசைதிருப்பப்படுகிறது. இறுதியில் எதற்கும் லாயக்கற்றவன் என்னும் எதிர்மறைப் பெயரையும் பெற்றுத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கீதா. உங்கள் கருத்துக்கள் ஒவ்வொரு முறையும் எனக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு