செவ்வாய், செப்டம்பர் 27

மயக்கமா? குழப்பமா?

        'மனம் சொல்கிறபடியெல்லாம் கேட்டால் மனிதன் மகிழ்ச்சியோடு வாழலாம்!'
         இது ஒரு மனிதனின் நம்பிக்கை. மனம் சொல்லியது... 'அழகான வீடு ஒன்றைக் கட்டிக் கொள்!'
          அந்த மனிதன் அழகான வீட்டைக் கட்டிக் கொண்டான்.இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரம். அதை ஒட்டினாற் போல மிகப் பெரிய ஏரி. சுற்றிலும் பசுமையான மரங்கள். திரும்பிய இடமெல்லாம் வண்ணவண்ணப் பூக்கள். இவற்றின் நடுவே அந்த வீட்டை உருவாக்கினான்.
      ஒரு நல்ல நாளில் அந்த வீட்டில் குடியேறினான். தினமும் வேளாவேளைக்குச் சாப்பிட வேண்டியது. இயற்கை காட்சிகளை ரசிக்க வேண்டியது. இதுதான் அவன் வேலை!
         தினமும் அதே காட்சி... அதே மலைகள்... அதே மரங்கள்... அதே மலர்கள்...கொஞ்ச நாளில் அவனுக்குச் சலிப்பு ஏற்படத் தொடங்கியது.
        இப்போது மனம்  சொன்னது... "இனி இந்த வீடு வேண்டாம்... இதை விற்று விடு!"
     அந்த மனிதன் உடனே செயலில் இறங்கினான். ஒரு தரகரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தான்.
       "தரகரே! இந்த வீட்டை விற்க வேண்டும்!"
       தரகர் வீட்டைப் பார்த்தார். அவருக்கு வியப்பு! " இவ்வளவு அழகான வீட்டை எதற்காக விற்க வேண்டும் என்கிறீர்கள்?"
      " எனக்கு இந்தச் சூழல்  சலித்து விட்டது.  அவ்வளவுதான்!"
      " நன்றாக யோசித்துப் பாருங்கள்!"
 " யோசித்துப் பார்த்து விட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். எனவே. நான் சொன்னதைச் செய்யுங்கள்!"

      "சரி... உங்கள் விருப்பம். " தரகர் போய்விட்டார்.
      இந்த மனிதன் தனக்கென்று வேறு ஒரு வீடு தேடினான். இதுவும் அழகான சூழ்நிலையில் அமைய வேண்டும் என்று விரும்பினான். எனவே தினந்தோறும் செய்தித்தாள்களில் விளம்பரப் பக்கங்களைப் புரட்டினான். ' வீடு விற்பனைக்கு' என்கிற பகுதியைத் தேடினான். ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது...
         அழகான பளிங்கு மாளிகை... விற்பனைக்குத் தயார்... ஏரி சூழ்ந்த எழில் மனை... மனங்கவரும் மலைச் சாரல் .. இதயத்தைக் குளிர வைக்கும் இயற்கைச் சூழல்... தேவைக்கு அணுகுங்கள்!" என்று சொல்லி தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார்கள்.
     மனம் சொல்லியது.
      'விடாதே.. இதுதான் நீ தேடிய வீடு.... உடனே வாங்கு!"
     உடனே தொலைபேசியை எடுத்தான். தொடர்பு கொண்டான்.  ' வீடு விற்பனைக்கு ...விளம்பரம் பார்த்தேன்..."
       "சரி...!"
       "அதை நான் வாங்க விரும்புகிறேன்... விலை எவ்வளவு சொன்னாலும் பரவாயில்லை!"
        "ஸாரி சார்! அதை நீங்க வாங்க முடியாது...!"
        "ஏன்?"
      " அது உங்கள் வீடுதான்...உங்களிடம் வந்த தரகர்   நான்தான்....  நான்தான் அந்த விளம்பரத்தைப் பத்திரிகைகளில் கொடுத்தேன்!"
      மனிதனுக்கு மயக்கம் வந்தது.
      மனம் இப்படித்தான். .. அது சொல்கிறபடியெல்லாம் கேட்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
        மனம் சொல்வதைக் கவனியுங்கள்.  அறிவால் அலசுங்கள்.  அப்புறம் செயலில் இறங்குங்கள்.  இப்படி செய்தால் குழம்ப வேண்டிய அவசியம் இருக்காது.   நீக்ரோ ஞானி ஒருவர் சொன்னது இது... " கடவுளின் ஆட்சியிலும் தேர்தல் உண்டு.அங்கு மூன்று ஓட்டுகளே செல்லுபடியாகும். கடவுள் உங்களுக்கு ஆதரவாக வோட்டளிப்பார். சாத்தான் எதிர்த்து வோட்டளிப்பார். இரண்டும் சமமாகிவிடும். கடைசியில் உங்கள் வோட்டுத்தான் உங்கள் தலைவிதியை முடிவு செய்யும்.
                                                              - தென்கச்சி கோ. சுவாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக