ஞாயிறு, டிசம்பர் 28

வடை பாயாசம்

விச்சு(அட நான் இல்லீங்கோ.. இவர்தான் இந்தக் கதையின் நாயகன்) தரகரிடம் சொல்லிக்கொண்டிருந்தான். 
ஏழு கழுதை வயசாச்சுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரமா கல்யாணம் முடிக்கனும்.
உடனே தரகரும் அட! அதுகென்ன நல்ல கழுதையா ஒன்னு பாத்துட்டா போச்சு என்றார்.
நீங்கவேற அண்ணாச்சி. ஒரு நல்ல அடக்கமான பொண்ணா பாருங்களேன். 
அடக்கமான பொண்ணு வேணுமின்னா மயானத்துக்குத்தான் போகனும்.
யோவ் தரகர்.. நான் சீரியஸா ஆயிடுவேன்.
அப்போ ஹாஸ்பிடலுக்கு போங்க தம்பி.
வேற வழியில்லாமல் சிரித்துவிட்டு..படாரென அவர் காலில் விழுந்தான்.
அவரும் மொக்கையை நிப்பாட்டிவிட்டு கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர் தம்பி என்றார்.
அப்போ ஆடு, மாடெல்லாம் மேய்ஞ்சிடாதா என்று அப்பாவியாக கேட்டான். பாடாரென அவர் விச்சுவின் காலில் விழுந்துவிட்டார். உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு கொண்டு வாரேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.

விச்சுவுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. நயன்தாராவுடன் டூயட் பாடுவதாக நினைத்துப்பார்த்தான். கூடவே பிரபுதேவா, சிம்பு, ஆர்யா என்று வரிசையாக ஹீரோக்கள் வர தனது முடிவை மாற்றிக்கொண்டான். நயன்தாரா வேண்டாம்... நம்ம ஊரு கருவாச்சி மாதிரி பொண்ணு கிடைத்தால்கூட போதும். அவளுக்கு காளியாத்தா மாதிரி கோபம் வருமே..! பரவாயில்லை..  கோபத்தில்கூட அழகுதான் என நினைத்துக்கொண்டே அசந்து தூங்கிவிட்டான்.

மேளதாளங்கள் முழங்க பச்சைக்கலர் பட்டுப்புடவையில் மணப்பெண் வர தாலிகட்டினான். மூன்றுமுடிச்சும் நான்தான் போடுவேன் என்று அடம்பிடித்துப்போட்டான்.

முதலிரவு அறையில் விச்சு சீரியஸாக புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். 
மணப்பெண் பால்சொம்புடன் வந்து பக்கத்தில் அமர்ந்தாள். 
ஏங்க.. என்ன படிக்குறீங்க?
புத்தகம்...
உங்க அறிவைக்கண்டு வியக்குறேன். 
படிச்சு முடிச்சிட்டு என்னங்க பண்ணுவீங்க?
மூடிதான் வைக்கனும்.
பால் சொம்பு டமாரென கொட்டியது.
ஓ..! அவள் கோபத்தில் இருக்கிறாள். 
நீ கோபப்படுவியா செல்லம்.
கோபம் வந்தா நான் காளியா மாறிடுவேன்
அய்யோ.. அப்போ நானு?
நீங்க காலிதான்.
ஹாஹா.. கஸ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கவலைப்படாத.. உனக்கு கோபம் வர்ற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன் என்றான் .  புத்தகத்தின் பக்கத்தை புரட்டுவதை நிறுத்திவிட்டு 
என்னைப்பிடிச்சிருக்கா? என்று அப்பாவியாய் கேட்டான்.
பிடிக்காமலா...உங்கள் பக்கத்தில் இம்புட்டு நெருக்கமா உட்கார்ந்திருப்பேன்.

ம்ம்.. நாம ஹனிமூன் போக ஊட்டிக்கு ஒரு டிக்கெட் எடுத்திருக்கேன்.
ஒரு டிக்கெட்டா..!
அய்யோ சந்தோசத்துல தலைகால் புரியாம ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துட்டேனே..
பரவாயில்லைங்க.. நாளைக்கே இன்னொரு டிக்கெட் எடுத்திருங்க.

ஆமா! நீங்க நிறையா படிப்பீங்களா?
ம்ம்.. கவிதைகூட எழுதுவேன்.
நீங்க எழுதுனதை கொடுங்க. நானும் உங்கள் கவிதையை படிச்சுப்பாக்குறேன்.
இதோ..இந்த நோட்டு முழுவதும் என்னுடைய கவிதைதான். ரசனையா இருக்கும். நீயும் படித்துப்பார் என்றான் விச்சு.
என்னங்க கவிதை. ஒன்னுலகூட உப்புச்சப்பே இல்லை.
அடியே நான் படிக்கத்தான் கொடுத்தேன். உன்னை யார் தின்னு பாக்கச்சொன்னா..!
ஏங்க ..நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். காளியா மாறிடுவேன்னு..

அப்புறம்.. 
அப்புறம்..
அப்புறம்..
இப்படியே பேசினா விடிஞ்சிரும். எனக்கு பத்து மணிக்கெல்லாம் தூக்கம் வந்திரும்ங்க..
பரவாயில்ல.. பட்டுக்குட்டி. இம்புட்டு நேரம் உன் தொல்லையை தாங்கிக்கிட்டேன், இன்னும் அரைமணி நேரம்தான.. என்றான் விச்சு.
வேண்டாம்.. நான் காளியா மாறிடுவேன்.

சரி அதைவிடு செல்லம். நான் இறந்திட்டா நீ என்ன பண்ணுவ?
நானும் உங்கள் கூடவே வந்திருவேன். நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் என்ன பண்ணப்போறேன்.
சரிதான்...அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான். நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு.
ஏங்க நான் காளியா மாறிட்டேன்.  இன்னும் ஒருவார்த்தைகூட பேசாமல் திரும்பி படுத்து தூங்குங்க. குட்நைட்.. என்று போர்வையை போர்த்தி படுத்துவிட்டாள்.

ஆஹா..! காளி தன் சுரூபத்தைக்காட்டிவிட்டாள். பயந்துபோய் அவனும் தூங்கினான்.
தூக்கத்தில் புலம்பினான்.
ஏங்க.. என்னங்க புலம்புறீங்க?
கனவுல நயன்தாரா வந்தாள்.
அப்புறம் திடீர்னு எதுக்கு கத்துனீங்க?
கனவுல நீயும் வந்துட்ட...
’நங்’கென்று மண்டையில் விழுந்தது.

காலையில் அம்மாதான் காபி கொண்டுவந்து விச்சுவை எழுப்பினார்கள்.
விச்சு பதறியபடி எழுந்தான். 
காளி எங்க? என்று அம்மாவிடம் கேட்டான்.
காளியா..! யார்ரா அது?
அடச்சே! எல்லாம் கனவா...! கல்யாணம் நினைப்புலேயே படுத்ததால கனவு வந்திருக்கும்போல என்றபடியே தலையைத்தடவினான்.
தலை புடைத்து வீங்கியிருந்தது.

புதன், டிசம்பர் 24

உன்னை நினைத்து


உன்னை நினைத்து
எழுதுவதெல்லாம்
கவிதையாகிறது
உன்னையே
எழுதுவதுதான்
காவியமாகிறது..!


உன்னை அணைக்க
நினைக்கும்போதெல்லாம்
என்னை பார்த்து
நிலா சிரிக்கிறது.


மரபுக்கவிதையா
வெண்பாவா
எனக்குத்தெரியாது
ஆனால்
நிச்சயம் நீ
புதுக்கவிதைதான்.


என் இதயம்
செய்யும் துரோகம்
என்னிடம் இருந்துகொண்டே
உன்னை நினைப்பது!


நீ விலக விலக
இறுகுகிறது
அன்பு!

சனி, டிசம்பர் 13

கற்பனை கடவுள்


மனம் ஏற்கவும் மறுக்கிறது
நிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ
உன் மொழியை நான் அறியேன்
 உன் பாலினமும் அறியேன்
இருக்குமிடமும் நான் அறியேன்
ஏதோவொன்றாய் நீ
அதுதான் கடவுளோ
குழந்தையின் சிரிப்பு
யாருக்கோ செய்யும் உதவி
யாரிடமோ பெறும் ஆறுதல்
ஏதோவொன்றில் நீ
அதுதான் கடவுளோ
உலகம் தோன்றிய 
அந்த ஆரம்பப்புள்ளி
சிந்தையில் அடங்காத உருவம்
மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட
ஏதோவொன்று
அதுதான் கடவுளோ
எந்த மதமும் இன்னொரு 
மதக்கடவுளை ஏற்பதில்லை
ஏதோவொரு பெண்ணை
பார்த்த நிமிடத்தில் வரும் காதல்
மூத்தோர்களின் பயமுறுத்தலிலேயே 
வரும் கடவுள் நினைப்பு
இதுபோல்
பல குழப்பங்களில் வாழும்
மனம்தான் கடவுளோ
அதனால்தான்
மனம் ஏற்கவும் மறுக்கிறது
நிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ..!